education

img

பள்ளிக் கல்வியை சீரழிக்கும் அரசாணைகளை திரும்பப் பெறுக!

தமிழக  அரசுக்கு  தமுஎகச  கோரிக்கை

சென்னை, செப்.17- பள்ளிக் கல்வியை சீரழிக்கும் அரசாணைகளை திரும்பப் பெற  வேண்டும் என்று மாநில அரசுக்கு  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.  இதுகுறித்து சங்கத்தின் மாநி லத்தலைவர் சு.வெங்கடேசன் எம்.பி.,  பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் வெளியிட்டுள்ள  அறிக்கை வருமாறு:- கேள்வி எழுப்புவதே கற்றலின் தொடக்க நிலை. அவ்வாறு கற்க முயன்றதே மனிதகுல வளர்ச்சியின் முதற்படி. அதன் தொடர்ச்சியாக உரு வான வரிவடிவம் தான் இன்றைய பள்ளிக் கல்வி முறையின் அடிப்படை.  முறையான பள்ளிக் கல்வி அத்தியா வசியமானதில் இருந்து பல்வேறு நாடு களில் கல்வியை பரவலாக்க முயற்சி கள் மேற்கொள்ளப்பட்டன. இந்தியா வில் பல தலைமுறைகளாக எல்லோ ரும் எல்லாவற்றையும் படிக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற ஒடுக்குமுறையின் அடிப்படையில் பெரும்பகுதி மக்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது.

விடுதலை பெற்ற இந்தியாவில் உருவான அரசமைப்புச் சட்டம் அனைத்து மக்களுக்கும் கல்வி தரும் பொறுப்பை அரசிடம் தந்தது.  தொடக்கத்தில் நாடு முழுக்க இது  சாத்தியப்படவில்லை. விதிவிலக்காக தமிழ்நாடு, கேரள மாநில அரசுகள்  வெவ்வேறு விதத்தில் கல்வியை பர வலாக்கி அனைவரும் பள்ளிக்கல்வி பெரும் வாய்ப்பை உருவாக்கி தந்தன. பள்ளிக்கு அனைவரையும் வர வழைத்தாலும் அவர்களை தக்க வைத்து பள்ளிக்கல்வி முடியும் வரை  படிக்கவைக்க முடியவில்லை. ஒவ்வொரு ஆண்டும் தேர்வு, தேர்ச்சி  பெறவில்லை என்றால் அதே வகுப்பில் மீண்டும் படிக்க வேண்டும், எட்டாம் வகுப்பு இறுதியில் பொதுத் தேர்வு (இஎஸ்எல்சி) என்ற வகையில்  தேர்வுகள் நடந்த காலம் ஒன்று உண்டு.

அச்சம், பதற்றம், தேர்வு முடிவுகள் உருவாக்கும் அவமானம் இவற்றின் விளைவாக மாணவர்கள் பள்ளியை விட்டு வெளியேறினர். தொடக்கக் கல்வியை கூட முடிக்காமல் வெளி யேறியவர்களின் எண்ணிக்கை அதி கம். இடைநிற்றலை தடுக்க இயல வில்லை. இது குறித்து நடந்த ஆய்வுகள், விவாதங்கள் ஆகியவற்றின் அடிப் படையில் தான் 14 வயதிற்கு உட்பட்ட  குழந்தைகளுக்கு தேர்வு வேண்டாம் என்றும், அதே வகுப்பில் தங்க  வைக்காமல் தொடர் மதிப்பீட்டின் மூலம் கற்றல் திறன் வெளிப்பாடுகளை மதிப்பிட்டு, கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்ற முடிவு கள் மேற்கொள்ளப்பட்டன.

கல்வி உரிமைச் சட்டத்தின் போதா மையை விமர்சித்தவர்கள் கூட, அது தேர்வு இல்லாமல் இடைநிற்றல் இல்லாமல் 8ஆம் வகுப்பு வரை கல்வியை உத்தரவாதப்படுத்தியது என்பதால் அச்சட்டத்தை வர வேற்றனர். தற்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தமானது, 5ஆம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்பின் இறுதி யில் வழக்கமான தேர்வு ( ரெகுலர் எக்ஸாம்) நடத்தவும் தேர்ச்சி பெறாத வர்களுக்கு உடனடியாக 2 மாதத்தில் மறுதேர்வு நடத்தவும் அதிலும் தேர்ச்சி பெறவில்லை என்றால் அதே  வகுப்பில் நிறுத்தி வைக்கவும் வழி  செய்கிறது. அதே வகுப்பில் நிறுத்தி வைக்க வேண்டியதில்லை என்று மாநில அரசு முடிவு செய்யவும் இந்தச்  சட்டத் திருத்தத்தில் வழி செய்யப் பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாடு அரசோ இந்தச் சட்டத்தை நடை முறைப்படுத்த அரசாணை வெளி யிட்டுள்ளது.

ஆண்டு முழுக்க பயின்று தேர்ச்சி பெறாத பத்து வயது குழந்தை எவ்வாறு இரண்டு மாதத்தில் மறு தேர்விற்கு தயாராகும். அவ்வாறு தயார்ப்படுத்த பெற்றோரும் மற்ற வர்களும் தரும் அழுத்தம் எத்தகைய  உளவியல் தாக்கத்தை குழந்தை மீது  ஏற்படுத்தும் என்று எந்த சிந்தனையும் இல்லாமல் ஓர் அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. தேர்வு மட்டும் நடத்தவும், தேர்ச்சி  பெறாவிட்டாலும் மூன்றாண்டு களுக்கு மட்டும் அதே வகுப்பில் நிறுத்தி வைக்க வேண்டியது இல்லை என்று அரசாணையில் கூறப்  பட்டிருந்தாலும் மூன்றாண்டு களுக்குப் பின் என்ன நிலை என்ற  கேள்வியும், தேர்வு முடிவு அறி விக்கப்படும் போது குடும்பமும் சமூக மும் குழந்தை தேர்ச்சி பெறவில்லை என்று கூறும் விமர்சனங்களும் குழந்தையின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தையும் நாம் கவலையோடு பார்க்க வேண்டியுள்ளது. இத னால் பள்ளிக்கல்வி மீது ஆர்வம்  குறைவதும் பெற்றோரே குழந்தை களை பள்ளியில் இருந்து விலக்கிக் கொள்ளும் சூழலும் உருவாகும். கற்றல் திறன் வெளிப்பாடு எதிர்பார்த்த அளவு இல்லை என்றால்  அதற்கு குழந்தையை மட்டுமே பொறுப்பாக்குவது நியாயமற்ற அணுகுமுறை. இது கற்றல் மேம்பாட்டிற்கு உதவாது.

தமிழ்நாடு அரசு உடனடியாக இந்த  அரசாணையை திரும்பப்பெற்று, தமிழ்நாடு அரசு பின்பற்றி வந்த 8ஆம்  வகுப்பு வரை தேர்வு இல்லாத, இடை நிற்றல் இல்லாத குழந்தைநேயக் கல்வியை வழங்க உரிய நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும்.  மொழிப்பாடத்தேர்வில் இரண்டு தாள்கள் தொடரவேண்டும் இடை நிலைக் கல்வியில் மொழிப்பாடம் மிக  முக்கியமான இடத்தைப் பெறுகிறது.  உரைநடை, செய்யுள், துணைப்பாடம், இலக்கணம், மொழித்திறன் வளர்ச்சி என்பன போன்ற பல பிரிவுகளில் கற்றதை வெளிப்படுத்தவே இரண்டு  தாள்கள் என்ற நடைமுறை மொழிப் பாடங்களில் பின்பற்றப்படுகிறது. எனவே பத்தாம் வகுப்புத் தேர்வில் பயின்ற பாடங்களை முழுமையாக வெளிப்படுத்தும் வாய்ப்பு இரண்டு தாள்கள் இருக்கும்போது தான் சாத்தியம். ஆனால் தமிழக அரசோ  மொழிப்பாடத் தேர்வில் ஒருங்கி ணைந்த ஒரே தாள் என்ற நிலைப் பாட்டை மேற்கொண்டுள்ளது.

ஒரு தாள் என்பது மொழிப் பாடங்களின் முக்கியத்துவத்தை குறைக்கும் நடவடிக்கையே. அர சாணையில் கூறப்பட்டுள்ள காரணம்  இலாப - நட்ட கணக்கின் அடிப்படை யில் நிர்வாக ரீதியானது. தாள் குறை யும் (பேப்பர்), தேர்வு அட்டவணைக் காலம் குறையும், ஆசிரியர் பணிச்  சுமை குறையும் போன்ற காரணங்கள்  கல்வியியல் வளர்ச்சிக்கு உதவக்கூடி யது அல்ல. மொழிப்பாடத்தில் உள்ள பிரிவு களை இரண்டு தனித்தனி தாளாகப் பிரித்து இரண்டு நாட்களில் தேர்வு நடத்தினால் அது மாணவர்களுக்கு சுமையில்லாமல் இருக்குமா அல்லது  அனைத்தையும் ஒரே தாளாக எழுது வது சுமையில்லாமல் இருக்குமா என்று இவ்விசயத்தை தர்க்க ரீதியாக  அரசு விளங்கிக்கொள்ள மறுக்கிறது. உயர் கல்வியில் பத்தாம் வகுப்பு மொழிப்பாட மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறதா இல்லையா என்ற கேள்விக்கே இட மில்லை. அது மாணவர்களின் மொழித்திறன், பண்பாட்டறிவு ஆகியவற்றுக்கு இன்றியமையாதது.  எனவே நடைமுறையில் உள்ள இரண்டு தாள் தேர்வு முறையைத் தொடர வேண்டும் என்று தமிழ்நாடு அரசை கோருகிறோம்.

விடுமுறையை ஒழித்துக்கட்டும் முயற்சி

காலாண்டு விடுமுறை என்பது குழந்தைகள் புத்துணர்ச்சி கொள்ள, உறவுகளோடு கலந்து பேசிப் பழக. குழந்தைப் பருவத்தில் உற்றார் உற வினர் நண்பர்கள் எனக் கூடி வாழ்வ தற்கு பழக. அத்தகைய மகிழ்ச்சியான செயல்பாட்டிற்கு நேரமே தராமல் காலாண்டு விடுமுறையில் பயிற்சி /  போட்டி நடத்தச் சொல்லி தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியிருப்பது நியாயமற்ற அணுகுமுறை. எதிர்ப்பு கிளம்பியதும், விருப்பமுள்ளவர்கள் நடத்தலாம் என விளக்கமளித்துள்ளது. எனில் பங்கேற்காதவர்கள் விருப்ப மில்லாதவர்கள் என்று பொருள் கொள்வதா? மகிழ்ச்சியாக நடக்க வேண்டிய செயல்பாட்டை சுமையாக கருதும் சூழலை உருவாக்குவது நியா யமா? எதற்காக இத்தகைய பணிச் சுமையை மாணவர்கள் மீதும் ஆசிரி யர் மீதும் திணிக்க வேண்டும்?

பள்ளி வேலை நாட்களில் நேரம்  ஒதுக்கி மகிழ்ச்சியாக நடைபெற திட்ட மிடாமல் காலாண்டு விடுமுறையில் காந்தியடிகள் வாரம் அனுசரிக்கச் சொல்லும் சுற்றறிக்கையை பள்ளிக்  கல்வித்துறை திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் வலியுறுத்தியிருக்கிறார்கள்.
 

;